
ஊழலுக்கு எதிரான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் 48ஆவது தேசிய அத்தியாயத்தை ஏற்படுத்த ஆதரவு தெரிவித்து இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனடிப்படையில் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் வெளிப்படையான ஊழலுக்கு எதிரான மாநாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.
மேலும் ஊலுக்கு எதிரான சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் இலங்கை குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி நிறைவேற்று குழுவிற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்லின, கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே இந்த செயற்பாடானது இலங்கையின் இன மற்றும் கலாசார ஜனநாயகத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என கூட்டத்தில் கலந்து கொண்ட ஊழலுக்கு எதிரான சர்வதேச பாராளுமன்ற அமைப்பில் அங்கம் வகிக்கும் பசுபிக் பிராந்திய தீவு நாடான ஓசினியா நாட்டின் பிரதிநிதி ஜோன் ஹைட் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் இலங்கை குழுவின் தலைவராக நீதியமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.





