கட்டிடங்களுக்கு மத்தியில் ஓர் காட்டு நகரம் : வியக்க வைக்கும் சீனர்கள்!!

368

 
காற்று மாசடைவதால் சூழல் ரீதியாக ஒவ்வொரு மனிதனும் நோய்களையும் பல பிரச்சினைகளையும் எதிர்நோக்க நேரிடும். அந்த வகையில் மனிதன் சுத்தமான காற்றைப் பெறுவது மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் உலக நாடுகளில் இதற்கான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதுடன், இந்த திட்டத்தில் சீனாவும் அங்கம் வகிக்கின்றது.

உலக நாடுகளில் அதிக அளவில் காற்று மாசுபடுதல் பிரச்சினையை எதிர்நோக்கும் நாடாக சீனா காணப்படுகின்றது.

இந்த நாட்டு அரசு ஏற்கனவே மாசற்ற காற்றினை உறிஞ்சிக் கொள்வதற்காக பல டவர்களை நிறுத்திய போதும், தற்போது காற்று மாசுபடுதலில் இருந்து மீள ஒரு சிறந்த முடிவு எடுத்துள்ளது.

அத்துடன், சீன நாட்டு அரசு காற்று மாசுபடுதல் பிரச்சினைக்கு தீர்வாக “காட்டு நகரம்” எனப்படும் கட்டிடங்களில் மரம் நடும் திட்டம் ஒன்றினையும் அறிமுகம் செய்துள்ளது.

குறித்த திட்டம் தெற்கு சீனாவின் மலைப்பகுதியான லிசோவு என்னும் இடத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த கலையை முதலில் இத்தாலிய கட்டடக்கலை வல்லுநரான ஸ்டெஃபனோ போரி என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

சுமார் 30,000 பேர் வசிக்கும் அளவிற்கான வீடுகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ளதுடன், இதனை லிசோவு முனிசிப்பாலிட்டி ஏற்று நடத்துகிறது என தெரிய வந்துள்ளது.

சாதாரண நகரங்களைப் போலவே கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், உணவகங்கள் போன்ற எல்லா வசதிகளும் இங்கு காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த நகரத்தின் மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய சூரிய ஒளி மின்சாரம் மற்றும் புவிவெப்ப சக்தியைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நகரத்தின் முன்பாக பூங்கா மற்றும் தோட்டத்தைப் போல மரங்களும், செடிகளும் நடப்பட்டிருக்கும். நகரத்தினுள் 40,000 மரங்களும், 10 இலட்சம் செடிகளுமாக மொத்தம் 100 தாவர வகைகள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.

நகரத்திலுள்ள மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 10,000 தொன் கார்பன் டை ஒக்சைடு மற்றும் 57 டன் காற்று மாசுக்களை உறிஞ்சி, 900 தொன் ஒக்சிஜனை இவை தரவல்லவை என இதனை வடிவமைத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.