சூரியவெவ சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது இலங்கை கிரிக்கட் நிறுவனம்!!

791

கடந்த தினம் சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் போது தற்காலிக சேவை அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பணியாளர்களுக்கு இடம்பெற்ற அசௌகரியம் தொடர்பில் இலங்கை கிரிக்கட்ட நிறுவன தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவினர் தமது மன வருத்தத்தை வௌியிட்டுள்ளனர்.

இதற்கு காரணமாக கிரிக்கட் நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சரியான முறையில் செயற்படுவதற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனம் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தால் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை ஈடுசெய்வதற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தற்போது தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஆடைகள் கழற்றப்பட்டதன் பின்னரே அவர்களுக்கான சம்பளத்தொகை வழங்கப்பட்டதால் அந்த ஊழியர்கள் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

நாளொன்றுக்கு 1000 ரூபாய் என்றடிப்படையில் ஏறக்குறைய 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட காற்சட்டைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் இலட்சினை பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அக்காற்சட்டையை மீளப்பெற்றுக்கொண்டதன் பின்னரே சம்பளப்பணத்தை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அந்த ஊழியர்கள் அரை நிர்வான நிலையில் திரும்பும் நிலை ஏற்பட்டிருந்தது.