ஊவாபரணகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரகொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தை அண்மித்ததாக காணப்படும் உமா ஓயாவில் நேற்று முற்பகல் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 வயதான தாய், 32 வயதான மகள் மற்றும் மகளின் பிள்ளை ஆகிய மூவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிற்பகல் 1 மணியளவில் அப்பகுதிக்கு நீராடச் சென்ற நபரொருவர், மேற்படி மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்ததைக் கண்டு வெலிமடை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
வெலிமடை மொரகொல்ல பிரதேசத்தை சேர்ந்த கருப்பையா புஷ்பவதி (32), கதிராயி (81) மற்றும் இரண்டரை வயதான தங்கராஜா லெனினி என்ற சிறுமி ஆகிய மூவருமே இவ்வாறு சம்பவத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு நீதிவான் பரிசோதனைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக வெலிமடை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வரு கின்றனர்.






