பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சில நேற்று (24) நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோதிலும், தங்களின் கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டி.ஜே. ராஜகருணா குறிப்பிட்டார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான உடன்படிக்கை ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது கூறினார்.
இந்த உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், பெற்றோலிய தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிந்தது.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக மக்கள் கூட்டம் காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று (25) காலை முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகின்றது.
இன்று காலை 8 மணிமுதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த நேற்று (24) அறிவித்தார்.
மருத்துவ பீட மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளரான ரயன் ஜயலத்தைக் கைதுசெய்ய முற்பட்டபோது ஏற்பட்டிருந்த நிலைமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், மருத்துவ பீட மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளரை கைதுசெய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில், தமது கடமைகளுக்கு சிலர் இடையூறு விளைவித்ததாக, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று அறிவிருத்திருந்தனர்.
இதேவேளை, வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் பல அதிருப்தி தெரிவித்துள்ளன.
தமக்குப் பொருத்தமற்ற விடயங்களுக்காக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தவறான செயலாகும் என தரப்படுத்தப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நிரோஷன பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்ற நிலையில், கடந்த முறை தொடர் பணிப்பகிஷ்கரிப்பை அறிவித்தபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முழு நாட்டிலும் கேலிக்கைக்குரிய ஒரு சங்கமாக மாறியுள்ளதாக தரப்படுத்தப்பட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கூறினார்.
அரசாங்கத்தைக் கவிழச்செய்வதன் ஊடாக அடுத்து வரும் அரசாங்கத்தில் தங்களில் ஒருவருக்கு சுகாதார அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நப்பாசையில் இத்தகைய அடிப்படையற்ற பணிப்பகிஷ்கரிப்புக்களை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்றது என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், மக்களை பாரிய சிரமத்திற்குள் தள்ளிடும் வகையில் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பை எந்தவிதத்திலும் அங்கீகரிக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக சுகாதாரத் துறையிலுள்ள எந்தவொரு தொழிற்சங்கமும் ஆதரவளிக்கவில்லை என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அரசியல் நோக்கங்களை இலக்காக்கொண்டு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முற்படுவதாக சுகாதாரத் துறையின் தொழில்சார் புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ், கூறியுள்ளார்.
மேலும், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையாகவே அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு அமைந்துள்ளதாக ரயில்வே ஊழியர் தொழிற்சங்க கூட்டப்பின் செயலாளர் சம்பத் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு பாரிய அழுத்தம் விடுக்கப்படும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த பணிப்பகிஷ்கரிப்பு நியாயமற்ற ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.