கடனில் நாடகங்களை பார்ப்பதை விடுத்து வீட்டுக்கொரு நீர்சுத்திகரிப்பு இயந்திரங்களை பொருத்துங்கள்!!

537

 
இன்று பலரும் நுண்நிதி கடன்களைப் பெற்று வீட்டில் தொலைக்காட்சிகளையும், டிஸ் அன்ரனாக்களையும் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை விட வீட்டுக்கொரு வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பொருத்துவதன்மூலம் சுத்தமான குடிநீரை பருகமுடியுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் நேற்று (31.07.2017) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது..

தற்போது தொற்றாத நோயின் தாக்கம் எமது நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக நாட்பட்ட சிறுநீரக நோய்த்தாக்கமுடையவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் எட்டு மாவட்டங்கள் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்களை கொண்ட மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளது. அதில் எமது மாகாணத்தில் வவுனியா மாவட்டமும் முல்லைத்தீவு மாவட்டமும் அதிகளவிலான நோயாளர்களை கொண்ட மாவட்டங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சுத்தமான குடிநீர் பருகாமையும் ஒருகாரணமாக கருதப்படுகின்றது. சிறுவயதிலிருந்தே சுத்தமான குடிநீரை பருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பாடசாலைகளில் இவ்வாறான இயந்திரங்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

எனக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியிலிருந்து இதுவரை 18ற்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வருடமும் 7 பாடசாலைகளுக்கு இந்த இயந்திரம் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்களென பலரும் கலந்து கொண்டனர்.