ஓவியாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்!!

512

மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா 2010ம் ஆண்டு களவாணி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து இருந்தது. சீனி என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்து வந்தார்.

மலையாள பட உலகமும் அவரை ஒதுக்கி வைத்தது. இதனாலேயே 100 நாட்கள் வெளி உலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பித்தார்.

ஆரவ்விடம் தனது காதலை ஓவியா வெளிப்படுத்தினார். ஆனால் அவருடைய காதலை ஆரவ் ஏற்கவில்லை. நட்பாக பழகியதாக சொல்லி விலகினார். காதல் தோல்வியால் ஓவியா மன அழுத்தத்துக்கு ஆளாகி கண்ணீர் விட்டு அழுதார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயன்றார்.

மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பொலிசார் விசாரணை நடத்தவும் நேர்ந்தது. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் ஓவியாவை மணக்க நடிகர் சிம்பு விருப்பம் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை சிம்பு மறுத்தார்.

காதல் சர்ச்சையில் சிக்கிய ஓவியாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிகின்றன. இயக்குனர்கள் அவரை அணுகி கதை சொல்லி தங்கள் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

விஷ்ணு விஷாலின் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் அவரிடம் பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஓவியா தலை முடியை வித்தியாசமாக வெட்டி புதிய தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.