ஆப்கான் வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் பலி!!

510

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் சமீப காலமாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அபு சயீத், கடந்த மாதம் குணார் மாகாணத்தில் நடந்த வான்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், அந்த இயக்கத்தின் மத்திய ஆசிய பிரிவை சேர்ந்த தளபதிகள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் பலியாகி உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

இது பற்றி அவர்கள் கூறுகையில், “10-ந் தேதி கிழக்கு குணார் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அப்துல் ரகுமான் கொல்லப்பட்டார். அவருடன் அந்த இயக்கத்தின் மூத்த தளபதிகள் 3 பேரும் உயிரிழந்தனர்” என்றனர்.

இது பற்றி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மூத்த தளபதி ஜான் நிக்கல்சன் கூறுகையில்,

“அமெரிக்க வான் தாக்குதலில் அப்துல் ரகுமான் கொல்லப்பட்டிருப்பது, ஐ.எஸ். இயக்கத்துக்கு விழுந்த பலத்த அடியாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

மேலும், நங்கர்ஹார் மாகாணத்தில், அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 சிவிலியன்கள் உயிரிழந்து விட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.