நாடு திரும்பிவரும் இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களை அரவணைத்து ஆற்றுப்படுத்தும் செயற்திட்டங்கள் பலவும் இன்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடு திரும்பும் மக்களை சமூகத்துடன் இணைக்கும் இவ்வாறான செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக விளையாட்டுப்போட்டிகளில் நாடு திரும்பிய இளைஞர் யுவதிகளை இணைக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
இந்த வகையில் கடந்த 13.08. 2017 ஞாயிற்றுக்கிழமை வவுனியா யங் ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் 8 கழங்களிடையே கூமாங்குளம் அஸ்திரம் நற்பணி மன்றத்தினர் இவ்வாறான நாடு திரும்பிய இளைஞர்களை உள்ளடக்கி கிரிக்கட் சுற்றுப்போட்டியினை மிக சிறப்பாக நடத்தி முடித்தனர்.
அஸ்திரம் நற்பணி மன்றத் தலைவர் ஸ்ரீகரன் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முன்னாள் சுகாதார அமைச்சர் மாகாண சபை உறுப்பினர் பா.சத்தியலிங்கம் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் .
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், சிறுவர் நிதியத்தின் செயல்திட்ட அதிகாரி திருமதி கல்யாணி, மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ். .ஸ்ரீநிவாசன், ஜ.தே.கட்சி இளைஞர் அமைப்பைச் சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .
மேலும் அஸ்திரம் நற்பணி மன்ற பொருளாளர் கிருஸ்ணமூர்த்தி மற்றும் சுரேந்திரன் ஆகியோரும் போட்டிகளை ஒழுங்கமைத்து நடத்தினர் .
இறுதிப் போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக்கழகமும் பூந்தோட்டம் சார்ள்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. மிக சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட 6 ஓவர்களைக் கொண்ட இப்போட்டி இறுதியில் ஒரு பக்கம் சார்ந்ததாக அமைந்தது.
சார்ள்ஸ் அணியினர் 6 ஓவரில் 95 ஓட்டங்களைப் பெற்றனர் . இதில் சங்கர் மட்டும் 65 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார் .
சுப்பர் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தால் 35 ஓட்டங்ளை மட்டுமே பெற முடிந்தது. பூந்தோட்டம் சார்ள்ஸ் அணியினர் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டனர் . சிறந்த ஆட்ட நாயகனாக சார்ள்ஸ் அணியின் சங்கர் தெரிவாகினார் .