ஜப்பானுக்கு மேலாக பறந்த வடகொரியாவின் ஏவுகணை : மக்கள் அச்சத்தில்!!

1095

ஜப்பான் பிராந்திய கடற்பரப்பிற்கு மேலாக வடகொரியா ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நாவின் அச்சுறுத்தலையும் மீறி வடகொரியா அண்மைக்காலமாக ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இன்று (29.08) காலை அந்நாட்டு நேரப்படி 6 மணியளவில் ஜப்பான் பிராந்தியத்திற்கு மேலாக ஏவுகணை செலுத்தப்பட்டுள்ளது.

வட கொரியாவினால் தற்போது செலுத்தப்பட்டுள்ள ஏவுகணையானது, பாரிய அச்சுறுத்தல் எனவும், இதற்கு ஜப்பான் தகுந்த பதில் வழங்குமெனவும் ஜப்பானின் தலைமை அமைச்சு செயலாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்கு பின்னர், வடகொரியா ஜப்பான் பரப்பிற்கு மேலாக தற்போது ஏவுகணையை செலுத்தியுள்ளது.

இருப்பினும் தற்போது செலுத்தப்பட்ட ஏவுகணையால் ஜப்பானில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே கூறியுள்ளார்.