கடந்த நூற்றாண்டு காலத்தில் அடையாளங்காணப்பட்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு வெகு அருகே ( சுமார் 44 இலட்சம் மைல் தொலைவில்) கடந்து செல்லும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா குறிப்பிட்டுள்ளது.
‘ப்ளாரன்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் சுமார் 2.7 மைல் அளவு கொண்டது. ஆனால், அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காது.
மற்ற விண்கல்கள் பூமிக்கு மிக அருகே வந்து சென்றிருக்கின்றன. ஆனால், அவை எல்லாமே இந்த விண்கல்லை விட சிறியவை என்று கணிக்கப்பட்டுள்ளது.
சூரியனும் மற்ற கிரகங்களும் உருவானதற்குக் காரணமான சம்பவங்கள் பற்றிய தடயங்கள் இந்த விண்கற்களில் இருக்கின்றன.
பூமிக்கு வெகு அருகில் கடக்கும் நிலையில் கூட, ஃப்ளாரன்ஸ், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள தூரத்தைவிட சுமார் 18 மடங்கு அதிக தூரத்தில்தான் இருக்கும். இந்த விண்கல் 1981 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கலிபோர்னியாவிலும் போர்டோ ரிக்கோவிலும் உள்ள நிலத்தில் இருந்து இயங்கும் ராடார்களைப் பயன்படுத்தி இந்த விண்கல்லைக் கூர்ந்து ஆராய விஞ்ஞானிகள் திட்டமிடுகின்றனர்.
இந்த அளவுள்ள ஒரு பொருள் பூமியைத் தாக்கினால் அதன் விளைவுகள் உலகளாவிய அளவில் பெரிதாக இருக்கும்.
விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் இது போன்ற ராட்சத அளவு கொண்ட பாறைகளில் சுமார் 90 வீதத்திற்கும் மேற்பட்ட பாறைகளைத் தாங்கள் இப்போது அடையாளம் கண்டுவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.






