புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வரும் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வித்தியா படுகொலை வழக்கு விசாரணை தொகுப்புரைக்காக யாழ்.மேல்நீதிமன்றம் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ட்ரயல் அட்பார் முறைமையில் கூடவுள்ளது.
குறித்த படுகொலை வழக்கு தொடர்பான சகல சாட்சியப் பதிவுகளும் கடந்த மாதத்தில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று இருதரப்புகளின் தொகுப்புரைக்காக மேல் நீதிமன்றம் கூடவுள்ளது.
அதன்பிரகாரம் இன்று செவ்வாயக்கிழமையும் நாளை புதன்கிழமையும் தொகுப்புரைகள் வழங்குவதற்காக ஏற்கனவே மன்றில் திகதியிடப்பட்டுள்ளது.
இரு தரப்புகளின் தொகுப்புரைகள் முடிவடைந்த பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்கான திகதியை அறிவிப்பார்கள் எனவும், பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.