மின்சாரசபை ஊழியர்களின் போராட்டம் தொடர்கின்றது!

364

இலங்கை மின்சாரசபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது.இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.

இதேவேளை, நாடு முழுவதும் மின் வினியோகம் சீரான முறையில் நடைபெற்று வருவதாகவும், மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்தம் தோல்வியடைந்திருப்பதையே இது காட்டுகிறது என்றும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

தமக்குக் கிடைத்திருக்கும் அறிக்கைகளின்படி, மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம் 100 சதவீதம் சீராக நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர், நாடளாவிய ரீதியில் 65 சதவீத மின் வினியோகம் சீராக நடைபெறுவதாகவும், மிகச் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

“மருத்துவ அதிகாரிகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்காது நோயாளிகளின் உயிருடன் விளையாடும் வகையில், தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களை மின்சார சபை தொழிற்சங்கம் விலக்கிக்கொண்டுள்ளதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற மனிதத்தன்மை இல்லாத வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத இலங்கை மின்சார சபை ஊழியர்களை எனது அமைச்சரவை சார்பில் பாராட்டுகிறேன்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள ஊழியர்கள் சிலர் ட்ரான்ஸ்ஃபோர்மர்களுக்குச் சேதம் விளைவித்து வருவதாகவும், இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் இலங்கை மின்சார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.