
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸ் அந்நாட்டுப் பிரஜை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளார்.
இலங்கையின் தென் பகுதியான ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் வைத்து பிரித்தானியைவைச் சேர்ந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர் குராம் செய்க் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இளவரசர் சார்ள்ஸ் கேள்வி எழுப்புவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றது. இக் கொலை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகள் தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கை வரும் பிரித்தானிய இளவரசர், இச்சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




