நிஜ வாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த நான்கு சகோதரிகள் நடிக்கும் தமிழ்ப் படம்!!

514

Nithin_Sathya

பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்திடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய குரு ரமேஷ் தனது முதல் திரைப்படத்தை இயக்குகின்றார். என்ன சத்தம் இந்த நேரம் என்ற அவரது திரைப்படத்தின் பெரும்பகுதிக் காட்சிகள் விலங்கியல் பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது.

நிதின் சத்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் நிஜவாழ்க்கையில் ஒன்றாகப் பிறந்த நான்கு சகோதரிகள் இணைந்து நடிக்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போவதும், பூங்காவின் காப்பாளரான நிதின் சத்யா ஒரு நாள் முழுவதும் செலவிட்டு அவர்களைக் கண்டுபிடிப்பதுவும் இந்தபடத்தின் கதையாகும்.

இது ஒரு மிகவும் சவாலான கதையாகும். இயக்குனரும், தயாரிப்பாளர் அனூப்பும் இந்தக் கதையை நன்கு திட்டமிட்டபின்னரே களத்தில் இறங்கியுள்ளனர். அதுபோல்,ஒன்றாகப் பிறந்த நான்கு பேர் திரைப்படத்தில் நடிப்பதும் புதிய முயற்சியாகும்.

நீண்ட தேடலுக்குப் பிறகு கிடைத்த சென்னை பார்க் கொன்வென்ட்டில் படித்துக் கொண்டிருக்கும் இந்த சகோதரிகள் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள். இந்தப் படத்தின் 95 சதவிகிதப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டது.

இதன் சில பகுதிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் படமாக்கப்பட்டன. இங்கு படப்பிடிப்பு நடத்திய முதல் குழுவினர் நாங்கள்தான் என்று அங்கிருந்த ஊழியர்கள் கூறினார்கள். தலக்கோணம் நீர்வீழ்ச்சியிலும் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன.

சில சிறப்பம்சங்களுக்காக இந்தப் படத்தினை லிம்கா சாதனை புத்தகத்திற்கும் அனுப்பியுள்ளோம் என்று நிதின் சத்யா தெரிவித்தார். இயக்குநர் ஜெயம் ராஜா மற்றும் மனு( காதல் மன்னன் புகழ்) போன்றோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.