மன்னார் – யாழ் பிரதான வீதி, மாந்தை சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் யாழ். ஆத்திமோட்டை பகுதியைச் சேர்ந்த சன்முகப்பிள்ளை இதுசன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொர்பில் மேலும் தெரியவருவதாவது, திருக்கேதீஸ்வரத்தில் இருந்து 4 இளைஞர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில், அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி பிரதான வீதியை கடக்க முற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறியுடன் குறித்த முச்சக்கர வண்டி மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
அதில் ஒரு இளைஞன் உயிரிழந்த நிலையில், திருக்கேதீஸ்வரத்தை சேர்ந்த சதுகரன் (வயது-19), கூறாய் மேற்கைச் சேர்ந்த சதீஸ்குமார் (வயது-20), கைதடியைச் சேர்ந்த எஸ்.தமிழ் வானன் (வயது-18) ஆகிய மூன்று இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
அத்துடன், படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் வீதி போக்குவரத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், லொறியின் சாரதியை கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







