சற்றுமுன் வெளியானது வித்தியா கொலை தீர்ப்பு .. ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்!

1210

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உட்பட ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் இன்று கூடியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்துக்காட்டினார்.தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை வாசித்தார். இறுதியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் 2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்,

3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார்,

4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன்,

5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன்,

6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன்,

8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன்,

9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் என்போருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எழுவருக்கு மரணதண்டனை:30 வருட ஆயுள் தண்டனை!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன், 30 வருட ஆயுள் தண்டனை, 40000 தொடக்கம் 75000 தண்டப் பணம், மாணவி வித்தியா குடும்பத்திற்கு ஒரு மில்லியன் நட்டஈடென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முதலில் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி சசிமகேந்திரன் தனது தீர்ப்பில், 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகள் மீதான கூட்டு வன்புணர்வு, கொலை, கொலைச்சதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கரும், அதே தீர்ப்பையை அளித்திருந்தார்.

மூன்றாவதாக, நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பை நிறைவு செய்துள்ள நிலையில், 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத முதலாவது, ஏழாவது எதிரிகளை விடுவிக்குமாறும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.

இதையடுத்து, குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேரையும் நோக்கி, உங்களுக்கு ஏன் மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனித்தனியாக அவர்களின் விளக்கங்கள் கோரப்பட்டன.

இந்த நிலையில் 7 பேருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.இதனிடையே இலங்கை காவல்துறையின் தடயவியல் குற்றப் பிரிவு வித்தியா படுகொலை வழக்கினில் முறையாக விசாரணை செய்யவில்லையென மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.அத்துடன் 10 மாதங்களுக்கு பின் விசாரணையைப் பொறுப்பேற்ற விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் நிசாந்த சில்வாவுக்கு நீதிபதி இளஞ்செழியன் பாராட்டுக்களினையும் தெரிவித்துள்ளார்.