இந்திய அணியின் வரலாற்று சாதனைக்கு முற்றுப்புள்ளி : பதிலடி கொடுத்த அவுஸ்திரேலியா அணி!!

504

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 4வது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்கும். அவுஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் முதலில் இருந்தே நிதானமாக விளையாடினர். அதன்பின்னர், வார்னர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

தனது நூறாவது போட்டியில் விளையாடும் வார்னர் 45 பந்துகளில் அரைச் சதம் அடித்து அசத்தியதுடன், 103வது பந்தில் சதமடித்தார். அவரை தொடர்ந்து பின்ச்சும் அரைச் சதமடித்தார்.

இறுதியில் இந்த ஜோடியை கேதர் ஜாதவ் பிரித்தார். 35 ஓவரில் 231 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் படேலிடம் பிடி கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் 124 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரை தொடர்ந்து சதத்தை நெருங்கிய பின்ச், உமேஷ் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார். இவர் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் 94 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித்தையும் உமேஷ் யாதவ் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.

பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் அவுட்டானார்.

கடைசியில் அதிரடியாக ஆடிய ஹாண்ட்ஸ்கோம்ப், 30 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரியுடன் 43 ஓட்டங்கள் எடுத்து உமேஷிடம் வீழ்ந்தார்.

இறுதியில், அவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக வார்னர் 124 ஓட்டங்களும், பின்ச் 94 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

335 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ரகானே சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 106 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரகானே 53 ஓட்டங்களுடன் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ரோகித் 65 ஓட்டங்களில் எதிர்பாரத விதமாக ரன் அவுட்டாக, இந்திய அணியின் ஓட்டம் விகிதம் குறையத் துவங்கியது.

விராட் கோஹ்லி 21 ஓட்டங்களிலும், அதிரடியாக விளையாடிய பாண்ட்யா 41 ஓட்டங்களிலும், வெளியேற இந்திய அணி தடுமாறத் துவங்கியது.

கிதர் ஜாதவ் மற்றும் மணீஷ் பாண்டே ஓரளவுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், ஜாதவ்(67), பாண்டே(33), டோனி(13) என வெளியேற இந்திய அணி இறுதியாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்கள் எடுத்து 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு அவுஸ்திரேலிய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாட்டு போட்டிகளில் அவுஸ்திரேலிய தொடர் தோல்வியை சந்தித்தால் விமர்சனத்திற்குள்ளானது. அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் அந்நாட்டு அணியின் தலைவர் ஸ்மித்தை விமர்சித்தனர். தற்போது அந்த விமர்சனத்திற்கு எல்லாம், ஸ்மித் இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.