இலங்கையரின் வயிற்றில் ஒரு கிலோ கிராமுக்கு மேற்பட்ட தங்கம் : ஆச்சரியத்தில் வைத்தியர்கள்!!

546

 
இந்தியா – விசாகப்பட்டடினம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையரின் வயிற்றில் இருந்து 14 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த தங்க பிஸ்கட்டுகள் ஒவ்வொன்றினதும் நிறை 100 முதல் 150 கிராம் எடை கொண்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில், இருந்து சென்ற குறித்த நபர் விசாகபட்டினம் விமான நிலையத்தை சென்றடைந்த போது, அவரின் நடத்தையில் அந்நாட்டு சுங்க பிரிவினர் சந்தேகம் கொண்டனர்.

இதனையடுத்து, அவரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. முதலில், குறித்த நபர் கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தி வந்ததாகவே சந்தேகம் வெளியிடப்பட்டது.

எனினும், பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த நபர் நூதனமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபர் பொலிதீன் பையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளை விழுங்கியுள்ளமையை ஒப்புக்கொண்டிருந்தார். இதனையடுத்து King George வைத்தியசாலையில் குறித்த நபர் பரிசோதிக்கப்பட்டார்.

இதன் போது அவரின் வயிற்றின் குடல் பகுதியில் 14 தங்க பிஸ்கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை இன்றி தங்க பிஸ்கட்டுகளை வெளியேற்றியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

54 வயதான சந்தேகநபர் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக அந்நாட்டு சுங்க பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

எவ்வாறாயினும், 1 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட தங்க பிஸ்கட்டுகள் நபரின் வயிற்றில் இருந்தமை வைத்தியர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.