சமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ்வரன் சிந்திப்பது தவறு : அமைச்சர் ஹெகலிய!

335

Keheliya Rambukwellaவடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிந்திப்பது தவறானது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நேற்று ஊடகங்களில் தெரிவித்துள்ள கூற்றுக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதனைத் தெரிவித்த போதும் நாட்டின் அரசியலமைப்புக்கு மாறாக எதையும் நடைமுறைப்படுத்த முடியாது என குறிப்பிட்ட அமைச்சர் நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிந்திப்பதே தவறானது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..

நாட்டில் அரசியலமைப்பு உள்ளது. அதற்கிணங்கவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வடக்கு கிழக்கு இணைப்பானது நாட்டின் நடைமுறைச் சட்டங்களுக்கு அமைய நாட்டு மக்களின் இணக்கப்பாட்டோடு ஏற்படுத்தப்பட்டதாகும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாம் நினைத்தவாறு ஒரு ஒழுங்கு முறையின்றி மேலதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு கூறுவாரானால் அது கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அன்னியோன்ய நல்லுறவுடன் ஐக்கியமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னிச்சையாக இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பது முறையற்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் வட மாகாணத்துடன் சேர்ந்து செயற்பட எண்ணினால் வட மாகாணத்தின் இணக்கம் அதற்குத் தெரிவிக்கப்படுமானால் அரசாங்கம் அதனை நிறைவேற்றியாக வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.