தீபிகாவை பாதுகாக்க வேண்டும் : கமல்ஹாசன்!!

480

பத்மாவதி பட பிரச்சனையில் நடிகை தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரையை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாராகி உள்ள பத்மாவதி திரைப்படத்தை அடுத்த மாதம் 1 ஆம் திகதி திரைக்கு கொண்டுவர முடிவு செய்து அதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பாரதிய ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபா பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து தீபிகா படுகோனேவுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது, அவரது வீட்டிலும் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பத்மாவதி படத்திற்கு கமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார், இதுகுறித்து அவரது சமூக வலைத்தளத்தில், பத்மாவதி பட பிரச்சனையில் தீபிகா படுகோனை பாதுகாக்க வேண்டும். என்னுடைய படங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளன. உடலுக்கு தலை எவ்வளவு முக்கியமோ, அதுபோல் திரைப்படத்திற்கு கருத்து சுதந்திரம் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.