நடிகர் பார்த்திபன் தயாரிப்பாளர் அசோக்குமார் இறப்பு குறித்தும், தான் அனுபவித்த கந்துவட்டி கொடுமை குறித்தும் குரல்வழி தகவலை அனுப்பியுள்ளார்.
நடிகர் சசிக்குமாரின் அத்தை மகனான தயாரிப்பாளர் அசோக்குமார், நேற்று கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அசோக்குமாரின் தற்கொலை சம்பந்தமாக நடிகர் பார்த்திபன் குரல் வழி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ’அசோக் குமாரின் மரணம் நம்மை சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது. அவர் போல உணர்ச்சியுடன், விரைவாக முடிவெடுக்க கூடிய மென்மையான
மனிதர்கள் இனி இங்கே வாழவே முடியாது என்பதற்கு அவரின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த நிலை தொடர்ந்தால் கந்துவட்டி மட்டுமே இங்கே நீடிக்கும். இந்த முறை மிகவும் கொடுமையானதுடன், தண்டனைக்குரியதாகும்.
நாம் கஷ்டப்படும் வேளைகளில் நண்பர்களை விட கந்துவட்டிகாரர்களே நமக்கு உதவுகின்றனர். அவசரத்திற்கு நாமும் அவர்களிடம் கடன் வாங்கி விடுகிறோம். ஆனால், இதனை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, நான் வாங்கிய வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக வளசரவாக்கத்தில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள எனது பங்களாவை விற்றேன்.
அதன் மதிப்பு இப்போது 7 கோடி ரூபாய் இருக்கும். ஒரு படம் நடித்து, அதன் மூலமாக வாங்கிவிடலாம் என நினைத்தேன். ஆனால், 13 ஆண்டுகளாக முடியவில்லை. என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு அதுதான்.
இப்போது நான் கூட ஒரு சிரமத்தில் இருக்கிறேன் என்றால், சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் அதனைக் கூறுவதற்கு சிரமமாக உள்ளது.
சங்கங்களாலும் இப்படியான பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையே உள்ளது. அதனால், கந்துவட்டி பிரச்சனையில் இருந்து நாம் தப்பிக்க ஒரே வழி, நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்கிற கூட்டுறவு அமைப்பு தான்.
அந்த அமைப்பிலிருந்து ஒருவருடைய சிரமத்துக்கு, இன்னொருவர் எப்படி உதவலாம் என்று யோசிக்க வேண்டும். இனியாவது இந்த மாதிரி ஒரு பலி ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.






