பொலிவுட்டில் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி மும்பையின் ஜூஹூ பகுதியில் தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர்கள் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு தளங்கள் இவர்களுக்கு சொந்தமானது. கீழ் தளத்தை உடற்பயிற்சி கூடமாகவும், மேல் தளத்தை வீடாகவும் உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் கீழ்தள உடற்பயிற்சி கூடத்தில் வைத்திருந்த ஐபாட் இசைக்கருவி மற்றும் ஐபேட் கம்ப்யூட்டரும் திடீரென காணாமல் போய்விட்டது. அதில் முக்கியமான தகவல்கள் அடங்கியிருப்பதால் அந்த பொருட்கள் காணாமல் போனதது குறித்து ஷில்பா ஷெட்டியின் முகாமையாளர் பொலிசில் புகார் செய்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அங்கிருந்த கண்காணிப்பு கமராவின் மூலம் பொருட்களை திருடிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதன்மூலம் திருடியவர்கள் யார் என்பதை அறிய முடியவில்லை. குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை ஷில்பா ஷெட்டி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.





