ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்துவரும் ஏழு வயது சிறுவனுக்கு, இராணுவத்தில் சேர்வதற்காக வந்த கடிதம் ஆச்சிரியத்தை அளித்துள்ளது.
சாஷா கமன்யூக் என்ற சிறுவனுக்கு, ஊசுரீஸ்க்கில் உள்ள இராணுவத்திற்கு ஆளெடுக்கும் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், ஒராண்டு இராணுவ பயிற்சியில் இணைவதற்காக, உள்ளூரிலுள்ள இராணுவ அலுவலகத்தை அணுகும்படி குறிப்பிடப்பட்டிருந்ததாக, ஊசுர்மீடியா என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
இதேபோல, இன்னொரு ஏழு வயது சிறுவனுக்கு கடிதம் வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறினாலும், ரஷ்ய இராணுவம் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.
`2001ஆம் ஆண்டு பிறந்தவர்களின் பட்டியலை அனுப்புவதற்கு பதிலாக, 2010ஆம் ஆண்டு பிறந்தவர்களின் பட்டியலை குழந்தைகள் மருத்துவமனை தவறுதலாக அனுப்பிவிட்டது` என்று இராணுவதிற்காக ஆட்களை சேர்க்கும் அலுவலகம், ஆ.ஐ.ஏ நொவோஸ்டி என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
மேலும், கடிதம் பெற்ற சிறுவன், இராணுவப்பணிக்காக சேர வேண்டாம் என்றும், அவர் இராணுவ அலுவலகத்திற்கு வராதமைக்காக தண்டிக்கப்படமாட்டார் என்றும் உறுதி செய்துள்ள அவர்கள், இந்த கடிதம் குறிப்பிட்ட இளைஞர்களை தயார் செய்வதற்கான வரைவு தயாரிக்க அழைக்கப்பட்ட கடிதம் மட்டுமே, பணியில் உடனடியாக சேர்வதற்கான கடிதமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவனின் குடும்பத்தினர் அந்த கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். அது மீமியாக வலம்வரத் தொடங்கியுள்ளது.
`ஊசுரீஸ்க் என்றால், இராணுவத்தில் சேர்வதற்கான கடிதம் ஏழு வயதிலேயே வந்தடையும்` என்ற மீமி மிகப்பிரபலமாக வலம் வருகிறது.
ரென் டி.வியிடம் பேசிய, சாஷாவின் தாத்தா, `அவர்கள் உத்தரவிட்டுள்ளபடி நாங்கள், இராணுவ அலுவலகத்திற்கு செல்வோம். கட்டாய இராணுவப் பயிற்சியிலிருந்து தப்பித்தவர்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை` என்று கூறியுள்ளார்.
யார் மனதையும் புண்படுத்துவதற்காக, இந்த கடிதத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்றும், `அது ஒரு நகைச்சுவையான செயல்` என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவன் சாஷா, இராணுவத்திற்கு மீண்டும் ஏமாற்றம் அளிக்கப்போவது குறித்து வருத்தமாக உள்ளார். காரணம், `எனக்கு ஒரே கனவுதான். பொலிஸில் இணைய வேண்டும், இராணுவத்திலல்ல` என்று மாஷ் டெலெக்கிராம் என்ற ஊடகத்திடம் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இது குறித்து கருத்தை பதிவிட்டுள்ள ஒரு இணைய பதிவாளர், `இராணுவ சேவையை முடிக்காமல், சாஷா பொலிஸில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்` என்பதை அவருக்கு நினைவு கூர்ந்துள்ளார்.






