இலங்கையில் இடம்பெறும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 10 வயது மாணவர்களுக்கு பொருத்தமானதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விசாரணையினை நடத்த உள்ளது. புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டப்படுகின்றார் எனின் இந்த முறைமை எந்தளவு சிறந்தது, வினாத்தாள் தயாரிக்கப்படும் முறை பிள்ளைகளுக்கு பொருத்தமானதா, புள்ளியிடும் முறை சரியானதா என்பது தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
இவ்விசாரணைகளின் போது சிறுவர் உளநல வைத்தியர்கள், கல்வி விஞ்ஞானம் தொடர்பான நிபுணர்கள் குழுவொன்றும் இதற்காக அழைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச சிறுவர் தினத்தில் புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் செயற்படும் நிபுணர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் சட்ட செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.





