பவர் ஸ்டார் சீனிவாசனை நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவு!!

431

power starமோசடி வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் பிணை பெறுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கார் எண்ணை மாற்றி விற்று மோசடி செய்துள்ளதாக விருதுநகர் வட்டார போக்குவரத்து அதிகாரி திருத்தங்கல் பொலிஸில் அளித்த முறைப்பாட்டின் பேரில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், ஜோதிராஜன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சிவகாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜராகாததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து முன்பிணை கேட்டு சீனிவாசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், மனுதாரர் மீது சிவகாசி நீதிமன்றத்தில் பிடியாணை நிலுவையில் உள்ளது.

இதனால் மனுதாரர் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். அங்கு பிணை கேட்டு அவர் மனுத்தாக்கல் செய்யலாம். அப்படி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனுவை நீதிமன்று விசாரித்து, அன்றே உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.