கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து தீர்பளித்தது வவுனியா மேல் நீதிமன்றம்!!

389

vavunia_high_courtவவுனியா மேல் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த சுமதி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளியாக காணப்பட்ட பஞ்சலிங்கம் கோகிலன் அல்லது ரமேஸ் என்பவருக்கே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர் தொடர்பில் விளக்கம் நடைபெற்று 2007.05.30 ஆம் திகதி அன்று வவுனியா மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து குற்றவாளிக்கு பிடிவிறாந்தும் பிறப்பித்திருந்தது.

இந் நிலையில் இன்டபோல் பொலிஸாரினால் கைத செய்யப்பட்டு குற்றவாளி 2012ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் குறித்த குற்றவாளி வவனியா மேல் நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட தண்டனை தீர்ப்பை இரத்து செய்யுமாறும் புதிதாக விளக்கத்திற்கு கட்டளையிடுமாறும் கோரி ஒரு மனுவும் சத்தியக்கடதாசியும் அணைத்திருந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் அரச சட்டவாதி நிசாந் நாகரட்ணம் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.

இதனை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் குற்றவாளி மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உறுதிப்படுத்தி கட்டளையிட்டதுடன் சம்பிரதாய முறைப்படி மரணதண்டனை தீர்ப்பினை விதித்தார்.
இவ் வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நிசாந் நாகரட்ணம் ஆஜராகியிருந்தார்.