சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் வவுனியாவில் இன்று(02.02.2018) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சம்பள உயர்வு, நியமனத்தில் அரசியல் தலையீடு, தனியார் மயப்படுத்த முயற்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
அதற்கு ஆதரவாக வவுனியா நீர்வழங்கல் வடிகாலமைப்பு உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களது அலுவலகத்திற்கு முன்னால் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
மக்களுக்கு அவசியமான தேவையினை நாம் நேரம் பாராது வழங்கி வருகின்றோம். எமக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு இன்று வரை இந்த அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு 10 வீத நியமனம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது நிறுத்தப்பட்டு தற்போது அரசியல் ரீதியாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைநாம் வன்மையாக கண்டித்து எமக்கு நீதியை வழங்குமாறு இன்று இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றோம். எமக்கு தீர்வு கிடைக்காதுவிடின் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.










