பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ள்ளார்.
பாகிஸ்தானின் ஒருநாள் போட்டிக்கான அணியில் 1990 ஆம் ஆண்டுகளில் விளையாடிய அமீர் ஹனிப் இன் மகனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், முதல்தர போட்டிகளில் அதிகமாக பங்கெடுத்துள்ளார்.
இவரின் மகன் முகம்மது ஜர்யப். இவர் கல்லூரியில் கல்விகற்று வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற முகம்மது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். ஆனால், வயது அதிகம் என்பதால் அவரை தேர்வாளர்கள் நிராகரித்து விட்டனர். இதனால், மனமுடைந்த முகம்மது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து முகம்மதுவின் தந்தை ஹனிப் கூறுகையில்,
“ தேர்வாளர்கள் எனது மகனுக்கு வயது அதிகம் எனக்கூறி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு தேர்வு செய்ய மறுத்துவிட்டனர்.
இதனால், எனது மகன் மனஅழுத்தத்துடன் காணப்பட்டான். அவனிடம் பயிற்சியாளர்கள் நடந்தவிதம் தான் அவனை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது. மற்ற வீரர்களையும் இதுபோன்ற சூழலில் இருந்து காக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
கராச்சி 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் முகம்மது ஜர்யப் விளையாடி வந்துள்ளார். சமீபத்தில் லாகூரில் நடந்த போட்டியில் ஜர்யப் விளையாடும் போது, காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர், அப்போது, மீண்டும் வாய்ப்பு தருகிறோம் எனவும் கூறிவிட்டனர். ஆனால், வாய்ப்பு வழங்காததால் தற்கொலை செய்து கொண்டார் என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.