வவுனியாவில் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய நபர் கைது!!

570

வவுனியா நகரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து அரசியல் கட்சியின் உறுப்பினர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றுமுதல் வவுனியா கற்குழி 3வது ஒழுங்கையில் வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அங்கு குறித்த வீதியில் கால்வாய்கள் அமைக்கப்படாமல் வீதி புனரமைப்புப்பணிகள் இடம்பெறுவதால் கழிவு நீர் வீட்டிற்குள் செல்வதாகத் தெரிவித்து அப்பகுதியிலுள்ளவர்கள் நகரசபை செயலாளருக்கு கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தனர்.

இதையடுத்து நேற்று அங்கு சென்ற நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியில் வீதி புனரமைப்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் நகரசபையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த வீதிபுனரமைப்புப்பணிகளை நிறுத்தி நகரசபையின் அனுமதியைப் பெற்று புனரமைப்புப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த அரசியல் கட்சியின் உறுப்பினர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு வந்த ஒருவர் நகரசபை தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பணிகளைச் செய்யவிடாது இடையூறுகள் ஏற்படுத்தியதுடன் அவரை தனது கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து அச்சுறுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு அவரது மோட்டார் சைக்கிலின் சாவியினை பறித்து எடுத்துள்ளார். இதையடுத்து குறித்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் உடனடியாக நகரசபை செயலாளரிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரை அழைத்து பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவரிடம் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.