நியூஸிலாந்து அணி அடுத்த மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தநிலையில் இந்த தொடரில் இருந்து நியூஸிலாந்து அணித் தலைவர் ப்ரண்டன் மக்கலம், முன்னாள் தலைவர் ரோஸ் டெய்லர் ஆகியோர் விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயார்படுத்திக்கொள்ளவே இருவரும் விலகியதாக நியூஸிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
இயன் பட்லர் , லூக் ரோஞ்சி ஆகியோர் இவர்களுக்கு பதிலான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன் இலங்கை வரவுள்ள நியூஸிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் தலைவராக செயற்படுவார்.
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் 10ம், 12ம் திகதிகளில் ஹம்பாந்தோட்டையிலும், மூன்றாவது போட்டி 16ம் திகதி தம்புள்ளையிலும் நடைபெறவுள்ளன.
அத்துடன் இரண்டு 20 ஓவர் போட்டிகளும் 19ம் 21ம் திகதிகளில் கண்டியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





