வவுனியா வைத்தியசாலையிலிருந்து திருடிச்செல்லப்பட்ட குழந்தை : நடந்தது என்ன?

541

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றை நேற்று (09.03) காலை 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று முற்பகல் 11 மணியளவில் 5ஆம் இலக்க விடுதில் கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை வைத்தியசாலை விடுதியில் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு குழந்தையின் தாயார் குளியலறைக்குச் சென்றுள்ளார்.

சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை வழங்கிய நபரையும் தனது குழந்தையையும் காணவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் தாயாரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தாயார் பொகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் திருடப்பட்ட குழந்தை அவரின் 4வது ஆண் குழந்தை என்பதும் நேற்று அவரை வீடு செல்வதற்கு வைத்தியர் விடுவித்துள்ளார்.

இதன்போதே குழந்தையை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவின் உதவியுடன் குழந்தையை திருடியவரை தேடும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தனிப்பட்ட நபரின் கடத்தலா? அல்லது வேறு தேவைகளுக்காக குழந்தை கடத்தப்பட்டதா? போன்ற விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.