வவுனியாவில் வறட்சி காரணமாக 12 ஆயிரத்து 34 ஏக்கர் நெல் முற்றமுழுதாக அழிவடைந்துள்ளது.
வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் வவுனியாவில் ஏற்பட்ட வறட்சி குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்ண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த உதவி ஆணையாளர்
நாடு பூராவும் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக வவுனியா மாவட்டமும் கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தை பொறுத்தவகையில் 2017 மற்றும் 2018 பெரும்போகத்தின் இலக்காக 53 ஆயிரத்து 885 தசம் 5 ஏக்கரை விழைச்சலுக்கு எடுத்திருந்தோம். அந்த அடிப்படையில் மழைவீழ்ச்சியை அடிப்படையாக கொண்டு 48 ஆயிரத்து 399 ஏக்கருக்காக பயிர்ச்செய்கை கூட்டங்களை நடத்தியிருந்தோம்.
எனினும் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக 29 ஆயிரத்து 840 தசம் 5 ஏக்கர் வயல் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொண்டிருந்தோம். சராசரியாக 50 வீதமான காணிகளில் மாத்திரமே பயர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
புயிர்ச்செய்கையின் பின்னரான காலப்பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யாத காரணத்தினால் 12 ஆயிரத்து 34 தசம் 25 ஏக்கர் கணிகள் முற்றமுழுதாக அழிவடைந்துள்ளன.
அந்த அடிப்படையில் 6 ஆயிரத்து 170 விவசாயிகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நீரின்மை காரணமாக 2018 ஆம் ஆண்டுக்கான சிறுபோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
15 ஆயிரத்து 900 ஆயிரம் ஏக்கர் சிறு போகத்திற்காக எடுத்திருந்தோம். நீரின்மை காரணமாக 300 ஏக்கர் நிலத்தில் மாத்திரமே பயிர்ச்செய்கை மேற்கொள்ள தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வறட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக காப்புறுதி திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் காப்புறுதிக்காக 1500 ரூபா செலுத்தியவர்கள் 25 ஆயிரம் ரூபாவரை நட்டஈட்டினை பெற்றக்கொள்ள முடியும், அதற்கான விண்ணப்பங்கள் கமநல சேவைகள் திணைக்களத்தில் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 40 ஆயிரம் ரூபாவை காப்புறுதியாக பெறுவதற்கு ரூபா 675 செலுத்தியுள்ளவர்களுக்கு வழங்கப்படும். உரமானியம் பெற்று காப்பறுதி செய்யாத விவசாயிகளுக்கும் அரசினால் நட்ஈடு வழங்கப்படும் அதற்கான விண்ணப்பப் படிவங்களும் கமக்கார அமைப்புக்கள் ஊடாக வினியோகிக்கப்படுகிறது என தெரிவித்தார்.






