வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவில் ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதனால் பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
மாநிலத்தில் 14 மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது. பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்தது. கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் 6 விவசாயிகள் தற்கொலை செய்தனர்.
நேற்றும் 7 விவசாயிகள் பயிர் நாசமானதில் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் அனைவரும் பருத்தி பயிர் செய்த விவசாயிகள் ஆவார்கள். பணப் பயிரான பருத்திக்கு இவர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து மருந்துகள் அடித்து வளர்த்து வந்தனர். தற்போது பருத்தி எடுக்கும் சீசனில் மழை பெய்து நாசமாகி விட்டது. அதிக அளவில் பருத்தி சேதம் அடைந்தது.
இதனால் குண்டூர் மாவட்டத்தில் 2 பேரும், நல்கொண்டா, மேடக், அடிவாபாத் மாவட்டத்தில் தலா 1 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தற்கொலை செய்த விவசாயிகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.





