வவுனியா மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பொலிசாருக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று (28.03) வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தில் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் சிறப்பாக பணியாற்றிய 74 பொலிசாருக்கு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைவாக விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்திலுள்ள 13 பொலிஸ் நிலையங்களில் 2018 ஆம் ஆண்டில் கடந்த மூன்று மாதத்தில் வவுனியா மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும், போதைவஸ்து ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கைது செய்தமை, விபத்துக்களை தடுப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து பொலிஸ் பிரிவினருக்கும், வவுனியா பொலிஸ் பிரிவில் அகில இலங்கை ரீதியில் விளையாட்டுக்களில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பணப்பரிசில்களாக மொத்தம் 10 இலட்சத்து 72 ஆயிரத்து 950 ரூபா சிறப்பாக பணியாற்றிய பொலிசாருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, பொலிஸ் அத்தியட்கர் ரி.எம்.எஸ்.தென்னக்கோன், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான எம்.மல்வலகே, பியசிறி பெனாண்டோ, டபிள்யூ. வெல்கம மற்றும் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மகிந்த வில்வ ஆராட்சி ஆகியோர் கலந்துகொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்திருந்தனர்.






















