ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு அனைத்து மாகாண முதலமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் ஒவ்வொரு மாத இறுதி அமைச்சரவைக் கூட்டத்திலும் மாகாண முதலமைச்சர்கள் கலந்து கொண்ட போதும் அண்மைய காலங்களில் அது நடைபெறவில்லை.
எனினும் மீண்டும் இன்று தொடக்கம் அமைச்சரவை கூட்டங்களுக்கு முதலமைச்சர்கள் அழைக்கப்பட்டுவர் என கூறப்படுகிறது.
இதனடிப்படையில் முதற்தடவையாக மாகாண முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்க மாட்டார் என தெரியவருகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை நண்பகல் இருதய சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனாலேயே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, சூது மற்றும் பந்தய வசதிகளுடன் நட்சத்திர ஹோட்டல் அமைக்கும் திட்டம் தொடர்பான அமைச்சரவை பத்திரங்கள் இரண்டு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் திருத்தங்களுடன் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் குறித்த அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
எனினும் அந்த அமைச்சரவை பத்திரத்தில் நான்கு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.





