விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட விவசாய தம்பதிகள் : காரணம் இதுவா?

730

இந்தியாவில் பணப்பிரச்சனையால் தவித்து வந்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதற்கான சரியான காரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தின் கபாசி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயேஷ் பட்டேல் (40). இவர் மனைவி ரீட்டா (35). நேற்று தனது உறவினருக்கு போன் செய்த ஜெயேஷ் தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து சந்தேகமடைந்த உறவினர் உடனடியாக ஜெயேஷ் வீட்டுக்கு வந்த நிலையில் அவரும், ரீட்டாவும் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனடியாக, ஆம்புலன்ஸுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் இருவரையும் பரிசோதித்த போது அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தம்பதிகள் பூச்சி மருந்து விஷத்தை குடித்து இறந்துள்ளனர்.

இதனிடையில் ஜெயேஷும், ரீட்டாவும் பணப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களின் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் இல்லாத கவலையும் அவர்களை வாட்டி வந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் ஜெயேஷ் மற்றும் ரீட்டா இடையே தகராறு இருந்ததாக கிராம மக்கள் கூறியுள்ளார்.

நிலத்துக்கு தண்ணீர் கிடைக்காத விரக்தியில் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஜெயேஷின் தந்தை மணி கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அதன் முடிவில் தான் தம்பதியின் தற்கொலைக்கான சரியான காரணம் தெரிய வரும்.