எளிமையாக நடைபெற்ற நடிகை ரீமா கல்லிங்கல் திருமணம்!!

698

reemaமலையாள சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் ரீமா கல்லிங்கல். 2009ம் ஆண்டு ரிது என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான இவர் கேரளா கபே, நீலதாமர, ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ், கோ உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

கடந்த ஆண்டு இவர் நடித்த 22 பீமேள் கோட்டயம் படத்தை டைரக்டர் ஆஷிக் அபு இயக்கி இருந்தார். படப்பிடிப்பின் போது இருவருக்கு மிடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவதாக செய்திகள் வெளி வந்தன. இதை இருவருமே மறுக்கவில்லை.

இந்தநிலையில் சமீபத்தில் ரீமா கல்லிங்கல் அளித்த பேட்டியில் நானும், ஆஷிக் அபுவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறோம். எங்களது திருமணம் எளிமையாக நடத்த உள்ளோம் என்றார்.

அதன்படி ரீமா கல்லிங்கல் –ஆஷிக்அபு திருமணம் நேற்று கொச்சி அருகே காக்கநாடு பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. இருவரும் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக ரீமா கல்லிங்கல் எர்ணாகுளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு கேன்சர் நோயாளிகளின் மருத்துவ செலவுக்காக 10 லட்சத்தை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த தொகை பெரிய தொகை கிடையாது. மன திருப்திக்காக இந்த தொகையை வழங்குகிறோம் என்றார்.