இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஏழாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ரோஹித் சர்மாவின் அபார இரட்டைச் சதத்தின் துணையுடன், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 383 ஓட்டங்களை குவித்தது.
தீபாவளியையொட்டி ஆடுகளத்தில் வான வேடிக்கைக் காட்டி கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ரோஹித் சர்மா.
அவுஸ்திரேலியாவுக்கு 384 ஓட்டங்கள் என்ற என்ற மிகக் கடினமான வெற்றி இலக்கு நிர்ணியிக்கப்பட்டது.
பெங்களூரில் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி இந்திய அணியை துடுப்பெடுத்துமாறு பணித்தது.
இதன்படி ஆரம்ப ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அபாரமாக துடுப்பெடுத்தாடி 158 பந்துகளில் 209 ரன்கள் குவித்து, அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாகக் கூட்டினார். 50 ஓவர்களில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 383 என்ற மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையை எட்டியது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 45 ஓவர்கள் ஒரு பந்தில் சலக விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை எடுத்து தோல்வியை தழுவியது. இதன்படி ஏழு போட்டிகளைத் கொண்ட தொடரில் 3-2 என்ற வெற்றிக் கணக்கில் இந்திய கிண்ணத்தை தனதாக்கியது.
ரோஹித் ஷர்மா உலக சாதனை..
இந்தப் போட்டியில் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.
இவருக்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதமடித்தவர்கள் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் ஆவர்.
அத்துடன் ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்ஸ்சில் அதிக சிக்ஸர்கள் என்ற சாதனையையும் அவர் புரிந்தார். அவுஸ்திரேலியாவின் ஷேன் வட்சனின் சாதனை இதன் மூலம் அவர் முறியடித்தார்.





