வவுனியா நிருத்தியார்ப்பண கலாலய மாணவர்களின் கிராமிய குறவன் குறத்தி நடனம் அரச நடன விருது -2018 விழாவில் முதலிடத்தை பெற்றுள்ளது.
2018 அரச நடன விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04.05.2018) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது. மேற்படி விழாவில் வவுனியா மாவட்டத்திலிருந்து 15தொடக்கம் 29 வரையான வயதுபிரிவில் கலந்துகொண்ட குறவன் குறத்தி கிராமிய குழு நடனதிற்கே முதலிடம் கிடைக்கப் பெற்றுள்ளது.மேற்படி விருதினை வவுனியா நிருத்தியார்ப்பண கலாலய அதிபர் திரு.சுஜேந்திரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வு உயர் கல்வி, கலாசார அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நடனக் கலைக்காக பங்களிப்பு செய்த கலைஞர்கள் பாராட்டப்பட்டனர்.
‘நர்த்தன திலக’ வாழ்நாள் விருது பிரபல நடனக் கலைஞர் எஸ்.பி.கவிசேன மற்றும் பிரபல நடனக் கலைஞர் வசந்தி குஞ்சுதபாதம் ஆகியோருக்கு ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரோ, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல, அரச நடன ஆலோசனை சபையின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் ஆரியரத்ன களுவாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.