வவுனியாவைச் சேர்ந்த கிந்துஷன் தெற்காசிய போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை!!

643

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (06.05) நிறைவுக்கு வந்த 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வவுனியாவைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டி இலங்கை ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பை கொடுத்திருந்தது. இப்போட்டியில் பங்குபற்றியிருந்த இந்திய வீரர்களான அஜய் குமார் பிந்த் (15 நிமிடங்கள் 08.40 செக்.), குர்ப்பிரீத் (15 நிமிடங்கள் 32.53 செக்.) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

எனினும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இலங்கையின் கிந்துஷனுக்கும், நேபாளத்தின் நரேஷ் புதாவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது.

குறித்த இரு வீரர்களும் கடைசி சுற்றின் இறுதி 100 மீற்றர் தூரத்தை விட்டுக்கொடுக்கமால் சரிசமமாக ஓடியிருந்ததுடன், வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் மைதானத்தில் இருந்த இலங்கை ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், போட்டியின் எல்லைக் கோட்டை ஒரே நிமிடங்களில் குறித்த இரண்டு வீரர்களும் நிறைவுசெய்தாலும், 0.08 மில்லி செக்கன் வித்தியாசத்தில் இலங்கையின் கிந்துஷனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இதன்படி, குறித்த போட்டியை 16 நிமிடங்கள் 18.43 செக்கன்களில் நிறைவு செய்து கிந்துஷன் 3ஆவது இடத்தையும், 16 நிமிடங்கள் 18.51 செக்கன்களில் நிறைவு செய்த நேபாள வீரர் நரேஷ் புதா 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன்,

கடந்த வாரம் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியை 33 நிமிடங்கள் 56.87 செக்கன்களிலும், 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள் 56.10 செக்கன்களிலும் நிறைவு செய்து தங்கப் பதக்கங்களை வென்றதுடன், தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரிற்கும் தெரிவாகினார்.

எனவே, கிந்துஷனின் இந்த வெற்றியானது தெற்காசிய போட்டியொன்றில் முதல் தடவையாக சுவட்டு நிகழ்ச்சியொன்றுக்காக வவுனியா மாவட்டத்துக்கும், வட மாகாணத்துக்கும் கிடைத்த முதல் வெற்றியாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.