யாழ். இளைஞர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் : சந்தேக நபர்கள் விளக்கமறியலில்!!

719

யாழ்ப்பாணம் – நீர்வேலி கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நட்டத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்வேலி பகுதியில் நேற்று முன்தினம்(07.05) திங்கட்கிழமை இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது 23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டப்பட்டும், கிரிகேசன் (வயது 23) காலில் படுகாயமடைந்த நிலையிலும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறனர்.

தாக்குதலுக்கு உள்ளான இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாள்வெட்டுக் கும்பல் கிணற்றுக்குள் தூக்கி வீசியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போதே மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.