காரைதீவில் பட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் கொண்டுவந்து வீசப்பட்ட முதியவர் யார்? என்பது இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் நேற்று வைத்தியசாலைக்குச்சென்று அவரது உடல்நிலை முன்னேற்றம் பற்றியும், அவரை யாராவது தேடி வந்தனரா என்பது தொடர்பாகவும் வினவினார்.
இன்னும் சுயநினைவின்றிய நிலையிலிருப்பதால் அவரை மேலதிக சிகிச்சைக்காக உயர்வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டிய அவசியம் உணரப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்து முதியவர் வீதியில் தூக்கிவீசப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் 1.40 மணியளவில் காரைதீவில் இடம்பெற்றுள்ளது. அவர் வாயைத்திறந்து கதைப்பதாயில்லை. ஆனால் ஒரேயொரு வார்த்தையை மட்டும் பேசுகின்றார்.
சாப்பாடு, சாப்பாடு என்று மட்டும் கூறுகின்றார். இந்நிலையில், குறித்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் காரைதீவு வைத்தியசாலைக்கு வந்து அடையாளம் காட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தய செய்தி பட்டப்பகலில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் : சாப்பாடு… சாப்பாடு என முனங்கிய சோகம்!!
காரைதீவில் இன்று வயோதிபர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 70 வயது மதிக்கத்தக்க குறித்த வயோதிபர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. அவர் ”சாப்பாடு… சாப்பாடு” என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் பேசவில்லையென தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இன்று பகல் 12.40 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குறித்த வயோதிபரை ஆட்டோவில் கொண்டுவந்து காரைதீவு 12ஆம் பிரிவில் நடுத்தெருவில் இறக்கிவிட்டு சென்றுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கி.ஜெயசிறிலுக்கு கிடைத்த தகலுக்கமைய வயோதிபர் கிடந்த இடத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீதியில் கிடந்த அந்த வயோதிபரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தார்.
மேலும், அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கும் அறிவித்தல் கொடுத்ததன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
யார் ஆட்டோவில் வந்து வயோதிபரை கொண்டுவந்து இங்கு போட்டார்கள்? என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்தப்படத்திலுள்ள வயோதிபரை இனங்காண உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.









