74 பேரது உயிரை பறித்த கிளர்ச்சியுடன் தொடர்புடைய 150 படையினருக்கு மரண தண்டனை!!

475

gavelபங்களாதேஷில் 2009 இல் இராணுவத்தின் பல உயர் அதிகாரிகள் பலியாகக் காரணமான கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டதற்காக அந்த நாட்டு பொதுமக்கள் நீதிமன்றம் ஒன்று குறைந்தபட்சம் 150 படையினருக்காவது மரண தண்டனை விதித்துள்ளது.

எல்லைத் துணைப்படையின் உறுப்பினர்கள் 150க்கும் அதிகமானோருக்கும், பல பொதுமக்களுக்கும் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மிகவும் பெரியது.

800க்கும் அதிகமானோர் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த சிவில் நீதிமன்ற வழக்கில் ஒட்டுமொத்தமாக பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இவர்கள் எல்லாரையும் ஒன்றாக விசாரிக்கபதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தையே தற்காலிகமாக நிர்மாணிக்க வேண்டியிருந்தது.

இறுதியாக வெகு சாதாரணமாக நீதிபதி முறையே குற்றவாளிகளின் இலக்கங்களையும் அவர்களுக்கான தண்டனையையும் வாசித்தார்.

தலைநகர் டாக்காவில் பங்களாதேஷ ரைபிள் படைப்பிரிவின் தலைமை அலுவலகத்தில், முன்னர் நடந்த 30 மணிநேர கிளர்ச்சியின் போது, கொலை மற்றும் சித்ரவதைகளில் ஈடுபட்டதாக பல முன்னாள் எல்லைக் காவலர்கள் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்.

அந்த கிளர்ச்சியில் 57 இராணுவத்தினர் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர். நாடளாவிய கிளர்சியில் சம்பந்தப்பட்டதாக ஏற்கனவே சுமார் 6000 படையினர் சிறையிடப்பட்டுள்ளனர்.

அனைவரையும் கூட்டமாக வைத்துக் குற்றஞ்சாட்டி, தீர்ப்பு வழங்கப்பட்டதாக இந்த வழக்கை விபரித்த நியூயோர்க்கை தளமாகக் கொண்ட ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, அந்த விசாரணை நியாயமற்றது என்று கூறியுள்ளதுடன், மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளது.