வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் இன்று (18.05.2018) மாலை 5.30 மணிக்கு நகரசபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
உயிர் நீத்த உறவுகளுக்காக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எஸ்.சிவமோகன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வின் இறுதியில் தமிழ் விருட்சம் அமைப்பினரின் வேண்டுகோளிற்கு இணங்க பிரான்ஸ் வாழ் தமிழன் கார்மேகன் கலையழகன் அவர்களின் நிதியுதவியில் முன்னாள் போராளியோருவரின் பிள்ளைகளின் கல்விச்செலவுக்காக 5000 ரூபா பணத்தினை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் வழங்கி வைத்தார்.