டுபாய் அல் குயோஸ் பகுதியில் உள்ள தொடர்மாடிக் கட்டட நீர் தாங்கியில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டுபாயில் விடுதி ஒன்றில் உணவு தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த 34 வயதுடைய இலங்கையரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஒரு வாரங்களுக்கு முன் காணாமல் போனதாக அவரதுடைய நண்பரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அல் கைல் கேட் கட்டட குடியிருப்பாளர்கள் தமது குடிநீரில் துர்நாற்றம் வீசிய பின் அது குறித்து குடியிருப்பு தலைவருக்கு அறிவித்துள்ளனர்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நீர் தாங்கியில் இருந்து செவ்வாயன்று இலங்கையர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரஸ்ய விடுதி ஒன்றில் பணிபுரிந்த அவர் வேலையை விட்டு விலக்கப்பட்டதால் கவலையடைந்து அதிக குடிபோதையில் இவ்வாறு நீர்தாங்கியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பல பொறுப்புக்களை தன்வசம் கொண்டிருந்த அவர் வேலை பறிபோனதால் மனமுடைந்து இருந்ததாக அவருடைய நண்பர் தெரிவித்துள்ளார். இந்த மரணம் குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.





