குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

778

மட்டக்களப்பு – வெல்லாவெளியிலுள்ள மண்டூர் மூங்கிலாற்றின் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டிருந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதுடன், மண்டூர், கணேசபுரத்தை சேர்ந்த உமாபதி கிஷான் எனும் 15 வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று நண்பகலளவில் தனது நண்பர்கள் சிலருடன் மூங்கிலாற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அவருடன் நீராடிக் கொண்டிருந்த ஏனைய சிறுவர்கள் இந்த விபரத்தை அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கிராம மக்கள் ஆற்றுப் பகுதியெங்கும் தேடுதலை மேற்கொண்டபோது காணாமல்போன சிறுவனின் சடலம் ஆற்றுக் கரைகளில் வளர்ந்திருக்கும் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு உடற் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.