இதற்குப் பிறகும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால் விளைவுகளை காங்கிரஸ்தான் அனுபவிக்கும் : கருணாநிதி!!

1182

m.kஇதற்குப் பிறகும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் அதன் விளைவுகளை அந்தக் கட்சிதான் அனுபவித்துத் தீர வேண்டும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனே நினைத்தாலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தமுடியாது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை கருணாநிதி வெளியிட்ட அறிக்கை..

இலங்கைத் தொடர்பை அறுத்துக் கொண்டால் ஈழத் தமிழர்கள் பற்றியும், தமிழக மீனவர்கள் பற்றியும் யாரிடம் பேசுவது என்று ஞானதேசிகன் கேட்டுள்ளார். உணர்ச்சி வசப்படாமல் சிந்திப்பவர்களுக்குத்தான் இதுபுரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் தாயகமாகத் திகழும் இலங்கையின் தொடர்பை அறுத்துக் கொள்ள வேண்டும் என்று யாருமே கூறவில்லை.

தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள், போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றுதான் கூறுகிறோம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோனி, ஜி.கே.வாசன், நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் போன்றோரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர் மற்றவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டு பதில் கூற முனைய வேண்டும்.

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்குப் பிறகும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் அதன் விளைவுகளை அந்தக் கட்சிதான் அனுபவித்துத் தீர வேண்டும் என்று கூறினேன்.

இதற்குத்தான் காங்கிரஸ் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கும், தேர்தலுக்கும், கட்சி அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதாக யார் கூறியது ஞானதேசிகன் போன்றோர் முயற்சித்தாலும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாது என்பதை நான் நன்றாகவே அறிவேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.