வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது!!

1439

உலக சுற்றாடல் தினம் வவுனியாவில் இன்று (30.05) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நகரசபை மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வானது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி,

விழிப்புணர்வுப் பேரணியாக மணிக்கூட்டு சந்திவழியாக வைரவப்புளியங்குளத்தை வந்தடைந்து, அங்கு வீடு வீடாக பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கழிவுப்பொருட்களை வகையறாகப் பிரித்து அதனை சுத்திகரிப்பது தொடர்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந் நிகழ்வில் கூமாங்குளம் சித்திவினாயகர் பாடசாலை, இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

‘உயிரிகளின் உயிர் நாடியான ஈர நிலங்களை காப்பது எமது கடமை’ எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந் நிகழ்வில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், உப தலைவர் எஸ்.குமாரசாமி, அதிபர் எஸ்.அமிர்தலிங்கம், தெற்கு வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.