14 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியை நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அவரது கணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லெபனானுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற குறித்த பெண் தொடர்பான தகவல் எதுவும் கிடைக்கவில்லையென அவர் தெரிவிக்கின்றார். பலாங்கொட பெட்டிகல மஸ்ஹென்ன என்ற பகுதியை சேர்ந்த வசந்தா எனும் பெண் 2004ம் ஆண்டு வெளிநாடு சென்றார்.
அவ்வாறு வெளிநாட்டுக்கு சென்ற இப் பெண் 8 மாத காலமாக தொலைபேசி மூலம் தம்முடன் தொடர்பு கொண்டதாகவும் அவரது கணவரான விஜேகுமார் தெரிவிக்கின்றார்.
அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையெனவும் இதனால் தமது பிள்ளைகளை கவனிப்பதில் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி தொடர்பில் பல்வேறு அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லையெனவும் விஜேகுமார் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இக்குழந்தைகள் இருவரும் தாய்ப்பால் அருந்தும் வயதிலேயே தாய் வெளிநாடு சென்றார். தற்போது 14 வருடங்கள் கழிந்து விட்டன. இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை.
வெளிநாட்டு பணியகத்திற்கு பல்வேறு தடவைகள் சென்று முறையிட்டேன் இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை. எனது மனைவியை மீட்டு தர வேண்டும். அல்லது பிள்ளைகளுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.